ரொம்ப வியர்த்ததோ என்னவோ
தூரத்தில் தெரிந்த
மேகக் கைக்குட்டையிடம்
முகம்புதைத்துவிட்டான் சூரியன்..

அதுவும் சில நொடிதான்..

ஃப்ரஷ் ஆகி
வெளிவந்து
மறுபடி சிரிக்கிறான் மகிழ்வுடன்..


*


சந்தோஷமே வ்ருக வருக..

இடர் களையும் பதிகம்

ஆறாம் பாடல்

*



வாகர்த்தாவிவ சம்ப்ருக்தெள
வாகர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப் பிதரெள வந்தே
பார்வதி பரமேச்வரெள”

“என்ன மனசாட்சி.திடீர்னு ஜெயப்ரதா டான்ஸ் நினைவுக்கு வந்துடுச்சாக்கும்..”

“உன்னை..உன்னை… இது ரகுவம்சத்துல வர்ற ஸ்லோகம்..சொல்லும் பொருளும் போல இணைந்திருப்பவர்களும் சொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியானவர்களும், உலகத்தைக் காத்து ரட்சிப்பவர்களுமான பார்வதி, பரமேஸ்வரரை வணங்குகிறேன்னு அர்த்தம்..இதையே சலங்கை ஒலில்ல இளையராஜா கையாண்டிருப்பார்..

சரி.. இந்தப் பாட்டுல விருத்தனாகி பாலனாகின்னு வருதே

விருத்தன் என்றால் வயதில் ஆண்டுபல சென்றவர் முதியவர்னு அர்த்தம்..ஆனால் பாலனாகின்னு பார்த்தால் இளமைத் தோற்றத்துல இருக்கற ஈசன்.. கருத்தன்..முழு முதற்கடவுள்..அதாவது சொல்லுக்கும் பொருளுக்கும் ஓனர்..அதுவே அருத்தன்ங்கறதும்.. மேட்டர் ஸிம்ப்பிள் தான்..வா உள்ளே போலாம்..

ம்ஹூம் ஒரு விருத்தம் சொல்லேன்..

எத்தரமாய் பாட்டுவரும் ஏக்கமுடன் மேல்நோக்கி
…எட்டியெட்டிக் கற்பனைநூல் தக்கபடி வண்ணமிட்டு
பத்திரமாய் நெஞ்சுள்ளே பலவாறாய் ஆறவிட்டு
…பக்குவத்தைப் பார்த்துவிட்டுப் பாங்காகத் தறிபூட்டி
உத்தேசம் இதுவென்று உணர்வினிலே வரும்விருத்தம்
…ஓங்கித்தான் தாளினிலே அழகாகத் தானெழுதி
சித்தத்தில் உள்ளவற்றை இறக்கிவிட அஜந்தாவின்
…சித்திரமாய் நின்றிடுமே சிர்மல்கும் பாட்டதுவும்..!

அது சரி மன்ச்சு என்ன ஆச்சு..சோர்வா இருக்க

இல்லைப்பா ஒரு சிந்து பாடலாம்னு நினைச்சு பல சிந்துப்பாக்கள் பார்த்தேனா எப்படி எழுதுவேன்னு ஏக்கமா வருது..

உனக்கே ஏக்கம்னா நான் என்ன செய்யறது..

என்மனதில் ஒளியேற்ற வந்தாய் – ஈசா
என்றென்றும் உந்தனையே நினைத்திருக்க வைத்தாய்
கண்களிலே பெருகுதே கண்ணீர் – உனைக்
கண்டிட்ட போதிலே வந்துவிட்ட நன்னீர்
எண்ணங்கள் ஒருங்கிணைத்து உன்னை – இன்று
ஏற்றமாய்ப் பாடவும் நானிங்கு வந்தேன்
சின்னவன் ஆழ்மனதில் புகுந்து – சிவனே
சீர்மல்கும் பாட்டுக்கள் பலவாறாய் எழுது
சரியாடா..

“பரவால்லை மன்ச்சு.. நான் எழுதறா மாதிரி இல்லை..வா.. பதிகத்துக்குள்ள போகலாம்”

*

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.
*
திருநெடுங்களத்தில் வாழும் இறைவனே..மகாதேவா..

நீ எப்படி இருக்கிறாய்..

ஆண்டுகள் பல கடந்ததில் அந்தக் கணக்கிற்கேற்ப முதியவன்..ஆனால் இளமை வடிவங்கொண்டு இருக்கிறாய்..

நான்கு வேதங்களையும் நன்குணர்ந்த தலைவனாகவும்இருக்கிறாய்

முழுமுதற்கடவுளான நீ கங்கையை சடையில் வைத்துக் கொண்டாய்..

சொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியாகி இருக்கின்றாய்..

அதே சமயத்தில் உன் திருவடிகளைப் பாடியும் ஆடியும் மகிழும் அடியவர்களின் இடர்களை களைவாயாக..

*