குட்டிக் குழந்தை
சாக்லேட் பேப்பரைப் பொறுமையாய்ப்
பிரித்து
பின் எடுத்து
வாயில் இட்டுக்கொண்டு
பார்க்கும் பார்வையைப்
பார்த்தாலே பெருகும் சந்தோஷம்..

*


சந்தோஷமே வ்ருக வருக..

இடர் களையும் பதிகம்

மூன்றாம் பாடல்


*


மூன்றாம் பாடல்..

“என்றும்பதினாறுவயதுபதினாறு
மனதும்பதினாறுஅருகில்வாவாவிளையாடு”

“ஆரம்பிச்சுடயாடாப்பா..”

“ நீயும் பாட்டி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டயா மன்ச்சு.. சரீஈ.. இப்ப எதுக்கு சலிச்சுக்கற.. நான் பக்திப் பாட்டு தானே பாடினேன்”

“அடப்பாவி..”

“பின்ன.. பார்.. வள்ளி முருகன் பாடறா மாதிரி தானே வருது..
உன்விழிகள்பொங்குவதெதனாலே?
இந்தவீரத்திருமகன்வேலாலே.. சரிதானே”

”உன்னைத் திருத்தவே முடியாது..சரி பாட்டு என்னாத்துக்கு.. நம்ம மார்க் பையரைப் பத்தியா..ஏதாவது பாட் எழுதப் போறியா என்ன”

“அஃதே”
****

கால தேவன்:
******

காலக் கணக்கை முடிக்கும் இந்தக்
…கடின வேலை எனக்கே உண்டு
ஞாலம் முழுக்க வாழும் மக்கள்
..நன்றாய் இறுதியில் சொர்க்கம் நரகம்
ஜாலம் செய்தும் தானாய் முடிந்தும்
…ஜகத்தில் இருந்தே விடுவ தற்காக
பாலம் போன்றே வேலை செய்வேன்
..பாவி எமனே எனவே அழைப்பர்..

இருந்தும் இருந்தும் மனத்திற் குள்ளே
..ஏதோ சலனம்; நெகிழ்ச்சி இன்று
திருத்தம் உண்டா தீர்க்கம் கொண்டே
…திரும்பித் திரும்பிப் பார்த்தேன் கணக்கை
விருப்பம் இல்லை விஷயம் உண்டு
…விடலைப் பருவம் கடந்த பிள்ளை
சிறுவன் வயதோ பதினா றென்றால்
…சீச்சீ இன்றா வாழ்வு முடியும்..

பாலன் முகத்தைப் பார்த்தால் பாவம்
.. பால்போல் வெண்மை நெற்றி முழுதும்
கோலம் போலே மின்னும் நீறு
…கொவ்வை உதட்டில் என்ன பேச்சு
ஆலம் உண்ட அரனே சிவனே
…அனைத்து உயிர்க்கும் நன்மை செய்க
பாவம் பையன் தன்னைப் பற்றி
..பற்றை விடுத்துப் பிறரைக் கேட்கிறான்..

ஆர்ப்பாட் டமிலா அழகாய் முகமே
…அணிந்த நீறில் அணியாய் நெற்றி
வார்த்தே வைத்து செதுக்கி னாற்போல்
..வயண மாகத் தீர்க்க நாசி
பார்ப்போர் ஈர்க்கும் பணிவும் அருளும்
…பற்றி யிருந்த தோற்ற எழிலும்
மார்க்கண் டேயன் என்றே பெயராம்
…மாள்வான் இன்னும் சிலநே ரத்தில்

கலக்கம் மயக்கம் கண்ணில் தயக்கம்
…காட்ட விடாமல் தடுக்க ஈசா
வழக்கம் போலே உயிரை எடுமுன்
..வணங்கித் தொழுவேன் வாழ்த்தும் நானும்
பலமாய் நெஞ்சம் இறுக்க வைத்தே
..பாழும் இரக்கம் வந்து விடாமல்
நலமாய் எடுப்பேன் நல்லோன் உயிரை
…நாட்டம் விட்டே விடுவேன் கயிற்றை..

அடடா இங்கே நடக்கும் விஷயம்
…ஆச்சர் யந்தான் ஏனோ ஏதோ
திடமாய்க் கயிற்றை விட்டேன் நானும்
…தீர்க்க மாகச் சிவனின் நாமம்
தடவிச் சொன்ன சிறுவன் தட்டென
…தாவிப் பாய்ந்தே லிங்க முகத்தில்
மடலாய்க் கைகள் அணைத்தே பற்றி
…மகாதே வென்றே சொல்லும் போதில்

பாய்ந்தது கயிறு பக்குவ மாக
…பரமனை, பையனைப் பற்றியே இறுக்க
வாய்த்தனன் எனக்கே வகைதொகை யாக
..வாலிபம் இன்னும் வளர்ந்திடா பிள்ளை
சாய்த்திட வேண்டும் இவனுயிர் இன்று
..சங்கட மில்லை இதுவிதிக் கணக்கு\
ஆய்ந்திட எனக்கோ பொழுதெதும் இல்லை
…அழுத்தியே இழுப்பேன் அவனுடன் அரனை..

**

மார்க்கண்டேயன்..

கண்களில் கண்ணீர் மல்க
…காலையில் அம்மா பேச்சு
சொன்னதைக் கேட்பாய் பையா
…சோர்வெனை வந்து சேரும்
அன்னைநான் சொல்வேன் இன்று
…அரனையே பார்க்க வேண்டா
திண்ணமாய் மறுத்தே நானும்
..தீர்க்கமாய் இங்கே வந்தேன்

ஈசனே உன்னையே இங்குநான் கண்டபின்
தேசமும் தேகமும் வேண்டாமே – பூசனை
செய்துதான் உன்னடி சேர்ந்திடுவேன் எந்தனுக்கு
நல்லவழி என்றும் நவில்..
கடகடன்றே சுழன்றடிக்கும் காற்றைப்போல் வந்தான்
…காலனவன் கருமையுடன் கண்களையே வைத்தான்
விடமாட்டேன் சிறுவாவுன் வாழ்நாளும் இன்று
…விடைபெற்றுப் போகுதடா பார்ப்பாய்நீ நன்று
தடதடக்கும் குதிரையதன் குளம்பொலிபோல் குரலே
…தயங்காத நோக்கத்தில் எழுந்ததவன் கயிறே
உடல்தானே போகட்டும் என்றெண்ணி நின்றும்
…உணர்வுகளும் உலுப்பலுற அணைத்துவிட்டேன் அரனை..

**

ஈசன்

காலந்தனை காலத்தினில் காப்பாற்றுவோன் அவனை
காலன்பெரு கயிற்றால்இழுத் திடவும்முடிந் திடுமோ
ஆலம்விஷம் அள்ளிக்குடித் திட்டேபுவி அணைத்தோன்
பாலம்விதம் பாலன் தனை அடையப்பொறுப் பானா..

சிவந்தது முகமு மங்கே
..தீர்க்கமாய்க் கண்கள் மேலும்
நயமெலாம் விலகி நெஞ்சில்
…நல்கியே எழுந்த சீற்றம்
விலகிடு எமனே என்றே
…வித்தகன் குரலெ ழுப்பி
.நலமுடன் இடது காலை
…நகர்த்தியே உதைத்து விட்டான்.

*

கால தேவன்..

தொழுதுதான் இருந்தேனே நானும் – உன்னை
பழுதுகள் கொண்டிலா பக்தியில் தானும்
விருதுகள் வேண்டவிலை ஈசா – உன்
தாழ்துகள் கண்ணொற்ற ப் போதுமே ஈசா

எண்ணத் துறைபவனே - ஈசா
…என்னுயிர் கொண்டவனே
கண்களை மூடியின்று – உந்தன்
காலடி எனக்குத் தந்தாய்…

சிந்தனை செய்துவிடில் – துயரம்
..தீர்க்கமாய் மோதுதய்யா
என்பணி செய்ய வந்தால் – இந்த
..இக்கட்டும் ஏனோ ஐயா..

ஈசன்:

எமனென்றால் அனைவரையும் கலங்கடிக்கும் ஆற்றல்
..ஏற்றமுடன் கொண்டிருக்கும் தேவனென்று சொல்வார்
நனவுதனை நிஜமென்று நம்பிநிற்கும் மாந்தர்\
…நன்றாகக் கனவென்றே உணரவைப்போன் நீயே
கனம்பொருந்தும் கடினமன வேலையினை இங்கே
…கடிதாகச் சரியாகச் செய்பவன்நீ அன்றோ
பனம்பழம்தான் வீழ்ந்ததென்றால் காகமென்ன செய்யும்
…பதறாதே எமதர்மா பதில்சொல்வேன் நானே

எக்காலம் அடியாரின் குரல்க ளெல்லாம்
…ஏதேனும் கவலையிலே அழைத்தால் அங்கே
தக்கபடித் தோன்றித்தான் உதவிசெய்வேன்
..தாளாமல் இன்றும்நான் ஓடி வந்தேன்
பக்குவமாய் யோசித்தால் புரியும் காலா
….பாங்குடனே உனையுதைத்த் செய்கை எல்லாம்
தப்பாமல் தினம்தினம்நீ வேண்டி நின்ற
…திருவடியின் அருள்கொடுத்தேன் உனக்கே தானே..

இளவயது முதுபக்தி இன்னும் என்ன
…ஈசனிவன் பார்த்திடுவான் என்றே இங்கு
இளகாத மனங்கொண்டு மார்க்கண் டேயன்
…இரந்துருக வந்தேன்நான் கொள்ளாய் கோபம்
வளமுடனும் வாகாக தைரி யத்தை
…வாழ்க்கையிலே உன் தொழிலில் கொள்வதற்கு
விலகாத உமையாளின் பாதம் கொண்டு
…விளையாட்டாய் உதைத்தேன்நான் வேறு இல்லை..

*
காலதேவன்..

பாச மிகக்கொண்டு பல்விதமாய்க் கேட்டதற்கு
ஈசா பதிலினை ஈந்திட்டாய் – வாசமிகும்
பூக்களாய் மாறிப் பொலிந்ததென் நெஞ்சமும்
வாக்கினில் என்றென்றும் வா..

*


ஹப்புறம்…..

என்ன அப்புறம்மன்ச்சு, மார்க்கண்டேயனுக்கு சாகாதவரம்..எமனுக்குச் சின்ன உதை..பட் அந்த உதைக்குள்ள ஒரு அர்த்தமும் இருக்கு தெரியுமோ

என்னவாம்

ஹச்சோ ..விருத்த்துல ட்ரை பண்ணினேனே..புரியலையா என்ன..சிவன் மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டு எமதர்மனை உதைத்ததலம் திருக்கடவூர்..பட் அவர் ஏன் இடது கால்ல உதைத்தார்..

ஊர் உலகுக்கெல்லாம் உயிரை எடுக்கற எமன் கணக்கு தப்பவே கூடாதாம்..கொஞ்சூண்டு இரக்கம் காட்டினால் அவ்வளவு தான்.. காலக்கணக்கு முடிந்தும் வாழ்ந்தே நிறையப்பேர் இருக்க பூமிமாதா தாங்கமாட்டாளாம்..இதுவே எமனோட ரகசியக் கவலையா இருந்ததாம்..ஸோ மார்க்கண்டேயருக்கு அருளறமாதிரி இடது காலால எமனை உதைச்சுட்டார்..

ஏன்..ஏன்னா இடது கால் தேவியினுடையது..சக்திஸ்வரூபம்..அம்பாளாகப் பட்டவளது பதம் பட எமனுக்கு மீண்டும் மனவுறுதி தீர்க்கமாய் எழுந்ததாம்..தெரியுதா..”

“என்னவோ நீ சொல்ற நான் கேட்டுக்கறேன்.. சரீஈ..வா.பதிகத்துக்குள்ளே செல்லலாம்”.

*

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியா னுயிரைவவ் வேலென்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

திரு நெடுங்களத்துள் அருள் புரியும் ஈசனே, மகாதேவா

மார்க்கண்டேயன் உனது திருவடிகளையே கண்ணிறுத்தி நெஞ்சிறுத்தி வழிபட்டு வந்தான்.

.அவன் உன்னைச் சரண்புக, அவனை க் கூற்றுவன் எனப்படும் காலதேவனாகிய எமனிடமிருந்து விடுவித்து எமனையும் உதைத்து விட்டாய்..மார்க்கண்டேயனைக் காத்து அவனுக்கு அருள் புரிந்தாய்..அதைப்போலவே உன் பொன்னடிகளையே எண்ணி எண்ணி உருகும் அடியவர்களின் இடர்களை களைந்திடுவாயாக..


*