*
'அவள் இப்படிச் சொல்வதால் அவளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.இவள் இல்லையேல் தாங்கள் உயிருடன் இன்று இருக்க முடியாது. தங்களைக் கண்டதும் ஓடிவந்து எங்களிடம் சொன்னவள் இவள் தான். பிறகு நாங்கள் உங்களை இங்கு அழைத்து வந்தோம்.இந்த இரு நாட்களிலும் உங்களைப் பார்த்துக் கொண்டது இவள் தான் ' எனச் சொல்ல குலசேகரன் ஏதுமறியாமல் என்ன பேசுவது என்று அறியாமல் விழிக்க, ரத்னா கலகலவென நகைத்தாள்.

'இப்படி தடாலென்று நடுவில் சொன்னால் இவருக்கு எப்படிப் புரியும். நாங்கள் கொஞ்சம் வன போஜனத்திற்காக சிலம்பாற்றிற்குச்* சென்றிருந்தோம். அங்கு இருந்த அருவியில் நீராடி, பிறகு அங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் தான் இங்கு வருவதாக இருந்தோம்.நான் என் வழக்கம் போலக் கொஞ்சம் கத்தி விட்டு வரலாம் என காட்டினுள் வந்தால் உங்களைக் கண்டேன். பிறகு இவர்களிடம் சொன்னேன். அவ்வளவு தான் ' என்றவள் 'தாங்கள் யார். எப்படி அங்கு வந்தீர்கள். எப்படி இவ்வளவு காயமும் ஏற்பட்டது ' எனக் கேட்டாள்.

*

'என் பெயர் குலசேகரன். மதுரை அரண்மனையில் வேலை செய்கிறேன். வெகு நாட்களாக வனத்தினுள் புகுந்து ஓரிரு இரவுகள் கழிக்க வேண்டுமென ஆவலிருந்தது. அன்று அவ்வண்ணம் நினைத்து அங்கு வந்தபோது சில கள்ளர்கள் சூழ்ந்து கொண்டனர். போராடி நான் மயக்கமுற்று விழவும் அவர்கள் ஓடிவிட்டனர் போலும் ' என்றான்.

*
'என்னது மதுரையில் கள்ளர்களா.பாண்டிய அரசில் இப்படி எல்லாம் நடக்க வேண்டுமா என்ன. ஆனால் குலசேகரரே, தங்களது வாட் காயங்கள் கள்ளர்கள் விளைவித்தது போலத் தெரியவில்லையே ' என ஆரம்பித்த பெரியவரைத் தனது விழிகளினால் அடக்கிய ரத்னா 'குலசேகரரே,உங்கள் காயம் ஆறுவதற்கு இன்னும் சில வாரங்களாவது ஆகலாம். ஆனால் இப்போதைக்கு நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டியது மிக அவசியம். இங்கேயே நீங்கள் தங்கிக் கொள்ளலாம். வேண்டுமானால் தங்களது மதுரை முகவரியைக் கூறினீர்களென்றால், இங்கிருந்து ஆள் அனுப்பி உங்கள் உறவினர்களை அழைத்து வரச் சொல்கிறேன் ' என்றாள்

*

'தேவையில்லை ரத்னா. அரசாங்க அலுவலுக்காக செல்கிறேன் எனச் சொல்லியிருப்பதால் அவர்கள் என்னைத் தேட மாட்டார்கள். எனக்கு இருப்பது என் தாய் மட்டும் தான். அதுவும் வயதான காலத்தில் அவர்களைக் கவலைப் பட வைக்க வேண்டாம். நடக்க முடிந்தபின் நானே சென்று விடுகிறேன் ' என்றான்.
ரத்னா சரியெனத் தலையசைத்தாள்.

**************