ராமண்ணா - ரவி கூட்டணிக்கு அச்சாரமிட்ட

"குமரிப்பெண்"

1960 களின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நடிக்கவைத்து வரிசையாக ‘ப’ வரிசைப்படங்களை (பாசம், பெரிய இடத்துப்பெண், பணக்கார குடும்பம்) எடுத்துக்கொண்டிருந்த ராமண்ணா 1965-ல் எம்.ஜிஆரை வைத்து ‘பணம் படைத்தவன்’ படத்தை வெளியிட்ட கையோடு, (இதனிடையே 1965-ல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை நடிக்கவைத்து "நீ" படத்தையும் இயக்கியிருந்தார்) .மீண்டும் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ‘பறக்கும் பாவை’யை வண்ணத்தில் எடுத்துவரும் அதே சமயத்தில், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து கருப்புவெள்ளையில் உருவாக்கிய படம்தான் 'குமரிப்பெண்'. ஒருபக்கம் செண்டிமென்ட் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோதிலும், அதே சமயம் ஜனரஞ்சகமான படங்களும் வெற்றியடைந்துகொண்டிருந்த வேளையில் இப்படம் வெளியானது.

ரவிச்சந்திரனின் ஜோடியாக கலைச்செல்வி ஜெயலலிதா நடித்திருந்தார். குமரிப்பெண் படத்தின் பெயரைச்சொன்னதும் நமக்கு நினைவுக்கு வரும் முதல் காட்சி, கட்டுக்குடுமியுடன் கிராமத்திலிருந்து ரயிலில் வந்துகொண்டிருக்கும் ரவியை, நவநாகரீக உடையணிந்த ஜெயலலிதாவும், அவரது தோழிகளும் கிண்டலடித்துப்பாடும் "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" என்ற பாடல்தான். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியது. இதே "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" பாடலை பின்னர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாவைக் கிண்டலடித்துப் பாடுவதாகவும் வரும். அதை ரவிக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார். (என்ன சொல்றீங்க?. இதைப்பார்க்கும்போது உங்களுக்கு 'கட்டவண்டி... கட்டவண்டி...' பாடல் நினைவுக்கு வருதா?). அப்போதெல்லாம் ரவிச்சந்திரனின் படங்களில், கதாநாயகியை டீஸ் செய்து பாடுவதுபோல ஒரு பாட்டு வந்துவிடும். அதில் இதுவும் ஒன்று. (Music by Mellisai Mannar MSV)

P.B.S.பாடிய "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" பாடல், கடமையைச்செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கூர்க்காவை கிண்டலடித்து ரவி பாடுவதாக வரும். இந்தப்பாடலை T.M.S. பாடியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சில பாடல்களுக்கென்று சில குரல்கள் பொருந்துமல்லவா?.

ரவிச்சந்திரன் ஜெயலலிதா டூயட் பாடல், "நீயே சொல்லு... நீயே சொல்லு... நடந்தது என்னவென்று நீயே சொல்லு. ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு" பாடலை P.B.S., L.R.ஈஸ்வரி பாடியிருந்தனர்.

ரவிச்சந்திரனின் சினிமா வாழ்க்கையில் அதுவரை கலர்ப்படங்களே வெற்றியடைந்து வந்த நிலையில், மாபெரும் வெற்றியைத்தந்த முதல் கருப்புவெள்ளைப்படம் குமரிப்பெண். 1966-ல் வெளியான மொத்தம் 42 தமிழ்ப்படங்களில் 10 படங்கள் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஓடின. அவற்றில் 'குமரிப்பெண்'ணும் ஒன்று. (எந்தப்படமும் வெள்ளிவிழாவைத் தொடவில்லை). நான் முன்பே சொன்னதுபோல, சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில் தியேட்டர் கிடைக்காமல், மயிலை காமதேனு அரங்கில் திரையிடப்பட்டு, அங்கு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடந்தபின், மவுண்ட் ரோடு காஸினோ அரங்குக்கு மாற்றப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

இன்றைக்கும் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களும் அருமையான பாடல்களும் கொண்ட படம் குமரிப்பெண்.


இதயத்தை வருடிய
[b]"இதயக் கமலம்"[/b]

ரவிச்சந்திரன் நடித்த இரண்டாவது வண்ணப்படம். பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தின் 'பிரசாத் புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கியிருந்தார். 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாதான் ரவிச்சந்திரனின் ஜோடியாக நடித்திருந்தார். ஜோடி என்பதைவிட அவர்தான் முழுப்படத்தையும் வியாபித்திருந்தார். இறந்துபோன மனைவியை எண்னி எண்னி இவர் வருந்த, கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ளாஷ்பேக்கிலேயே படம் நகரும். 'மேளத்த மெல்லத்தட்டு மாமா' என்று பாடியபடி தெருக்கூத்தாடியாக அறிமுகமாகும்போதும் சரி, பைத்தியக்கார விடுதியில் பைத்தியங்களோடு அடைக்கப்பட்டு அவதிப்படும்போதும் சரி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார் K.R.விஜயா. முதன்முதலாக ரவிச்சந்திரன் சோக நடிப்பை வழங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். நன்றாகச்செய்திருப்பார்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில்...
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலும்
"என்னதான் ரகசியமோ இதயத்திலே" என்ற பாடலும்
சுசீலாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன.
ரவிச்சந்திரனுக்காக, பி.பி.எஸ் பாடிய...
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" பாடலும்
"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடலும் பாப்புலராயின. இதில் ஒரு பாடல் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது.

தாய்க்குலத்தின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற 'இதயக்கமலம்' ஒரு பெரிய வெற்றிப்படம்.