தர்மயுத்தம்-150
"மெகா'' தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் "தர்மயுத்தம்'' தொடர், 150 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

கவுசல்யா, நிழல்கள் ரவி, அஜய், தீபாவெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் இத்தொடரில் நடிக்கின்றனர்.

வழக்கமான குடும்பக் கதைகளுக்கு மத்தியில் திரைப்படக் கலைஞர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட வித்தியாசமான தொடர் என்பதால், இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரபல இசை அமைப்பாளர் சந்திரசேகர் அவரிடம் பயிற்சி பெற்று தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கும் ரகுராமனை விழா மேடையில் சுட்டுக் கொல்கிறார்.

நீதிமன்றத்தில் அவருக்குத் தூக்குத்தண்டனை வழங்கும்போது, இறந்ததாகக் கருதப்படும் ரகுராமன் உயிருடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறான். வக்கீல் பைரவி திட்டமிட்டபடி ஜார்ஜ், ரகுவாக நடிக்க சம்மதித்தது தெரியவருகிறது. ஜார்ஜின் நடவடிக்கைகளால் சந்திரசேகர் பாடகி மீனாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொடர்கிறார். ரகுராமனை சந்திரசேகர் சுட்டதற்கான காரணம் தெரியவர, அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சந்திரசேகர் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க முன்வருகிறார். இதற்கிடையில் ஜார்ஜ் பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார்.

இதற்கிடையில் பைரவி, ஜார்ஜ் சாயலில் இருக்கும் ஏகலைவனை, ரகுவாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. ரகுவின் அக்கா மாதவி உள்ளிட்ட பலரை ஏமாற்றி பல வழிகளில் பணத்தை சுருட்டுகிறான். வெடிவிபத்தில் சிக்கிய ஜார்ஜ் தப்பித்து, தேவி, பைரவியின் கவனிப்பில் உடல் தேறி வருகிறான். இந்த சூழ்நிலையில் ரகுவாக நினைத்து, ஏகாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது. ஏகா அதை வைத்து பல திட்டங்கள் போடுகிறான்.

பைரவியும், ஜார்ஜ×ம் அவனது திட்டத்தை முறியடிக்கிறார்களா? தேவி - ஜார்ஜ் திருமணம் நடந்ததா? மீண்டும் ரகுராமனாக - ஜார்ஜின் இசை வாழ்க்கை தொடர்கிறதா? இப்படி சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பரபரப்பாக தர்மயுத்தம் தொடர்கிறது.

இந்த தொடர் மறுஒளிபரப்பாக திங்கள் முதல் வியாழன் வரை பகல் 12 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

வி.எச்.எஸ்.ஸ்கீன்ஸ் சார்பில் டி.சபாபதி, எஸ்.ஹேமந்த்குமார் தயாரிக்கிறார்கள். நாகசரவணன், சுரேஷ்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்க, கதை திரைக்கதை இயக்கம்: எம்.விஸ்வநாத்.