அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி


இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

(தொடரும்)

அன்புடன்