ஹலோ ஹாப்பினஸ் சந்தோஷமே வருக வருக..

இடர் களையும் பதிகம்.. தொடர்ச்சி..

**


**

காலம் என்பது மூன்றெழுத்துத் தான்.. ஆனால் இதையே இலக்கணமாய்ப் பார்த்தால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றாய்ப் பிரிப்பர்..காலத்திற்கு நேரமென்று அர்த்தமும் உண்டு..

சில பல காலங்கள் சென்றன என்று வாக்கியம் வந்தால் சில பல வருடங்கள், யுகங்கள் எனச் சொல்லலாம்

(எல்லாம் காலம்டா..
மன்ச்சு ஷ்ஷ்)

ஆகப்பலகாலங்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரம்.. என்னாச்சுன்னாக்க…

செந்தழற் கனலா இல்லை
..செவ்வரி இதழா இல்லை
பொன்னகை ஒளியா இல்லை
…போதையின் விழியா இல்லை
வண்ணமாய் இருக்குந்தோற்றம்
..வாகுடன் மிளிர்ந்த தங்கே
திண்ணமாய் சிகப்பாய் அன்று
…சென்றனன் கதிரோன் மேலே..

யெஸ்..மெல்ல மெல்ல மாலைக் கதிரோன் பைபை சொல்லிக் கிளம்புகின்ற நேரம்..அந்தக் கானகம்..இல்லை இல்லை சோலை..சோலையா..வனமா..எனச் சொல்ல இயலாது

பூஞ்செடி பலவும் உண்டு
…புளியமும் வேம்பும் மேலும்
மாஞ்செடி வளர்ந்த தோற்றம்
..மரங்களும் அங்கே உண்டு
வாஞ்சையாய் வருடும் காற்றில்
…வளைந்திடும் நாணல் உண்டு
பூஞ்சையாய்ச் சோகம் கொண்டால்
…புத்துயிர் வருமே யன்றோ..

எப்பொழுதும் வாசமிகுபூக்கள் கொண்ட தோட்டம்..அங்கே அடர்த்தியான அரச, வேப்ப புளிய ஆல மரங்கள்.. நடு நாயகமாய் ஒரு சின்ன மண்டபம்..அங்கே கருவிழிகளின் அழகில் கண்ணிமைகள் கட்டுண்டிருக்க அந்தக் கட்டழகி எண்ணத்தில் ஒன்றே ஒன்று, தன் உணர்வினில் ஓடி உறைந்திருக்கும் அவனை மனதில் கொண்டு அவனது லிங்கத் தோற்றத்திற்கு மலர்களால் அர்ச்சித்த வண்ணம் தவமாய் இருந்தாள்..

அவள்..ஈசனின் தலைவியான உமை தான்.. பாவம் தலைவி..தலைவிக்குத் தலைவிதி வசத்தால் தலைவனைப் பிரிந்து பூலோகத்தில் வந்துவிட்டாள்..இருப்பினும் பிரிவுத்துயர் தான்..ஓ..லார்ட் ஷிவா.. உங்களைப் பிரிந்து நான் இருக்க எப்படி மனதில் நினைந்தீர்..யூஹேவ் டு கம்..வென் யூஆர் கோயிங்க் டு கம்..என்று பலப்பலவாய் காதலாகிக் கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்டிருந்த வேளையில்…

“பெண்ணே…அழகியே”

:”யாரது..என் சிவ சிந்தனைக்குளத்தில் கற்கள் எறிவது..அதுவும் என்ன குரலோ..”

உமையின் விழிமலர்கள் விரிய வியப்பும் பயமும் குடிகொள்கிறது..

வாலிபன் தான்..ஆனால் தோற்றம்..கொஞ்சம் காரிருளின் கருமை நிறம்.. கண்களில் துறுதுறுப்பு குறும்பு பின் சற்றே ஒருவித பயமுறுத்தும் தன்மை.. மின்னலின் ஒளியைத் தன்னகத்தே கொண்ட பற்கள் தான் தீர்க்கமான நாசி..இதயத்தைத்துழாவிடும் கண்கள்,கொஞ்சம் ஆற்றுப் படுகைமேடு போல கொழுக்மொழுக் கருமைக்கன்னம்…குரலில் இனிமை.ம்ஹூம் இல்லை..

”பெண்ணே நீ யார்..”

மறுபடியும் கேட்டுச் சிரிக்கிறான் அந்தக் கள்ளன்..யெஸ் அவனைப் பார்க்கக் கள்ளன் போலத் தான் இருக்கிறது…போடா போ.. எனக்குப் பயமில்லை..என் உள்ளம் கவர்ந்தகள்வன் இப்போது என்னுடனில்லை..ஆனால் என் நெஞ்சத்தினுள் இருக்கிறான்.. யாருக்கும் யாரிடமும் எனக்குப் பயமில்லை…

எனச் சொல்லிக்கொண்டாலும் கொஞ்சம் பயம் தான்.. உதறி மெல்ல பதிலிறுக்கிறாள்..

நான் யார் என்பதற்கு முன் நீ யார்..

ஹா.. பெண்ணே ..என் கேள்விக்கு எதிர்க்கேள்வியா..சரி பழைய உவமை.. பூவில் எதற்காக வண்டுகள் மொய்க்கின்றன.. புதிதாகச் சொல்வதென்றால் கடலலைகள் கரையைத்தொட்டுவிடத்தானே மீண்டும் மீண்டும் அலைகின்றன.. நான் இந்தப் பக்கம் சென்றிருந்தேன் இருமுறை.. உன்னையும் கண்டேன்.. ஏதோ தீவிரமாய் கண்ணை மூடி இந்தக் கல்லில் பூக்கள் போட்டுக்கொண்டிருந்தாய்..உன்னழகில் மயங்காமல் இருக்க முடியுமா என்ன..எனில் உன்னிடம் பேசவே வந்தேன்..”

உமை சீறுகிறாள்.. இது கல்லில்லை.. என் கணவர் ..மற்றும் இந்த உலகத்துக்கே ஈசன்.. அவர் அசைந்தால் இந்த உலகே அசையும்..அவர் கண்ணோக்கினால் எந்தத் துரும்பும் சாம்பலாகிவிடும்.. நீ உட்பட..

கோபத்திலும் உன் பேச்சு அழகாயிருக்கிறது பெண்ணே – கள்ளன் சிரித்தான்.. கள்ளமாய்ச் சிரித்தான்..உன்னைக் கரம்பிடிக்க ஆசை எனக்கு…

வானில் சூரியன் மறைந்து மதி ஏறிக் கொண்டிருந்தான்..அன்று பெளர்ணமி என்பதாலோ என்னவோ தனது நிலவினை (கிரணங்களை) அந்த்ச் சோலைக்குள் முழுக்கக் காட்டும்போதுகண்ட காட்சியில் சற்றே மனமும் பதைத்தான்..

சொன்னவண்ணம் நிற்கவில்லை கள்ளன்.. தேவியின் கரத்தைத் துணிச்சலாய்ப் பற்ற தேவி உதறினாள்.. என்ன ஆச்சு..ஈசா.. இதை நீ பார்த்துக்கொண்டு தானிருக்கிறாயா..

”கடல் அலை என்று நன்றாகத் தான் உவமை சொன்னாய்..எந்தக் கடலலையும் கரையில் குடிபுக முடியாதடா…”

”பரவாயில்லை நீ சொல்வதைச் செல்ல வார்த்தைகளாய் எடுத்துக் கொள்கிறேன்.. நாமிருவரும் இருப்பது ஏகாந்தம் தானே..என்னை டா போட்டுக் கூப்பிடலாம் நீ..”

மறுபடியும் கரம்பற்ற முயல தேவி கொஞ்சம் நடுங்கினாள்..ஏகாந்தம் வேறு தனிமை வேறடா பாவி.. தனிமையில் நானிருக்க இப்படிச் செய்வது ஈசனுக்கே அடுககாது..மனதினுள் சொல்லிக் கொண்டவள் கிடுகிடுவென ஓடிஅந்தப் பக்கமிருந்தமரத்தின் பின் ஒளிந்தாள்..

சில நிமிஷம் தான்.. வெளியில் எட்டிப் பார்க்க கள்ளன் இருந்த இடம் வெறுமை.. திரும்பினால் மறுபடி கள்ளன்..சிரிப்புக் கள்ளன்..

வேறிடத்தில் விறுவிறுக்கஓடி மறுபடி ஒளிய அங்கும் வந்தான்..பின் மீண்டும் இன்னொரு இடம்..அங்கும் அவன்..

மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க. கொஞ்சம் நின்றாள் உமை..ஈசா உனக்குக் கண்ணில்லையா என்னைக் காப்பாற்று. இதென்ன கண்ணுக்குள் ஈசன் சிரிக்கிறார்.. திறந்தால்..கள்ளன் தோற்றத்தை விடுத்து அவள் உள்ளங்கவர்ந்த மகாதேவன்…சிரித்த படி..

தேவி..

”இதுவும் திருவிளையாடலில் ஒன்று எனச் சொல்லாதீர் இறைவா…” ஓடிச் சென்று சாய்ந்து கொண்டாள் மார்பினில். “..என்ன இது.. என்னை இப்படி பூலோகத்திற்கு அனுப்பி பின் திரும்ப வந்தபிறகும் இப்படியா”..- உமைக்கு வார்த்தைகள் கொஞ்சம்முன் பின் வந்தன..” ஓ மை லார்ட் ..இனி என்னைவிட்டு எங்கும் போகக்கூடாது..சமத்தோல்லியோ..ப்ளீஸ் இந்த ஹெல்ப் இந்த பூன் எனக்குக் கொடுப்பா”\\

ஷ்யூர் தேவி.. என்றார் ஈசன்..”இது ஜஸ்ட் ஃபார் ஃபன் தேவி.. நீ என்னிடம் பயமுற்றது போல் அங்குமிங்கும் ஒளிந்துகொண்ட இச்சோலை இனி ஒளிமதிச்சோலை என்றழைக்கப்படும்..அப்புறம்..என் இடது பக்கத்திலேயே நீ ஐக்கியமாகிவிடு.. இந்த சோலைக்கருகில் சமவெளியில் – திரு நெடுங்களத்தில் நானும் நீயும் தம்பதி சமேதராக அருள் பாலிக்கலாம்” என மேலும் சொல்ல தேவியின் கண்களில் ஆனந்தம் பொங்கியது..

இது தான் திரு நெடுங்களத்தின் தலவரலாறாகச் சிறிதுகற்பனை கலந்து எழுதியது..

*

எப்படி இருக்கு மன்ச்சு..

ஒண்ணும் சொல்றதுக்கில்லை போ..ஆனா உமாதேவி தவம் செய்த இடம்னு தான் வலையில் எல்லாவிடத்திலும் போட்டிருக்கு..எதற்காக பூவுலகு வந்தாள்னுல்லாம் விளக்கமா இல்லை..அப்புறம்..

அப்புறமென்ன மன்ச்சு..ஸ்ட்ரெய்ட்டா விளக்கத்துக்குள்ற போய்டலாமா..

நேத்துக்கு ஃப்ளாட் கீழ ஒரு பொண்ணோட பேசிக்கிட்டிருந்தயே..அவங்க சொந்த ஊர் கோயம்புத்தூராக்கும்..

எப்படிக் கண்டுபிடிச்ச..சரீ..இன்னொண்ணு..அது பொண் இல்லை..மாமி..வாவா..இடர்களையும் பதிகத்தின் பாக்களைப் பார்க்கலாம்..

**