*
கடல் மைனா..

*
சின்னக் கண்ணன்..

*
14 ரகசியம் இல்லாத ரகசியம்..!.

*

கணப் பொழுது என்பது என்ன.. ஆயிரம் தாமரை இதழ்களை ஒன்றன் மேலொன்றாக அடுக்கி அதனுள் ஒரு மெல்லிய ஊசியினை விட்டால் ஓரிதழுக்கும் அடுத்த இதழுக்கும் அந்த ஊசி செல்லும் நேரமே அது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். கணப்பொழுதில் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் எத்தனை..அது எப்படி நிகழும் எங்கு நிகழும் என யாராலும் சொல்ல முடியாது..அது கால தேவனின் விளையாட்டு.. அப்போது நிகழ்ந்ததும்அது தானோ என்னவோ..வெகு நாட்களாக மனதுக்கினிய காதலனைப் பிரிந்திருந்த துயரம் ,அந்தக் காதலன் தன்னை மறந்து விட்டானோ என நினைத்திருந்ததில் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த துக்கம், அவனை எதிர்பாராத விதமாகக் கண்டதில் ஏற்பட்ட மனச் சிலிர்ப்பு, பருவமடைந்த உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் இன்ன பிறவால் உந்தப் பட்டு விரைவாய் ராஜாதித்தரை அடைந்து அணைத்து கணப் பொழுதில் அவரிதழ்களில் முத்திட்டு மீண்ட அந்த ராஷ்டிர கூட மங்கையானவள் தளர்ந்து ஒரு கையால் புன்னை மரத்தைப் பிடித்துக் கொண்டும் மறுகையால் கன்னத்தில் தாடி மீசை குத்தியதால் ஏற்பட்ட மென்வலியால் சிறிது துடைத்த படி நின்று கொண்டாள்.. அவளது உடல் நங்கென்று அடிக்கப் படும் கோவில் மணி முதலில் வேகமாகவும் பின்னர் சிச்சிறிதாகவும் அதிர்வது போல மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. அவளது.கண்ணோரம் கொண்ட நீரும் மெல்லிய ஒளியில் பளபளத்தது..

*


ராஜாதித்யருக்கும் அதே கணப் பொழுது தான்..ஆனால் அவர் ஆண்மகன்.. உரங்கொண்ட தோள்கள்..திடங்கொண்ட மனது..தீர்க்கமான கண்கள்.. இருப்பினும் அவரும் எதிர்பாராமல் கிடைத்த பரிசினில் மயங்கி விட்டார்.. பிற்காலப் புலவரொருவர் சொன்னது போல,

முத்தமிட வாய்வழி மோகம் தலைக்கேறி
பித்தம் பெருகிடும் பார்..

என அவருக்கும் ஆகி விட மெல்லச் சென்று உடல் நடுங்கிக் கொண்டிருந்த நங்கையின் அனிச்ச மலரை விட மென்மையான தோளின் மீது சற்றே ஸ்பரிசித்தார். “ரேணுகா” எனச் சொல்லவும் செய்ய அவள் மெல்ல அவர் மீது சாய்ந்தாள்..பின்னர்….

*

விழிகள் நோக்குகையில் வாய்ச் சொற்கள் பலனற்றதாய்த் தான் போய் விடுகின்றன..இருப்பினும் சிறிது நேரம் கழித்தே “நேரம் கூடிவிட்டதே என நினைத்த ராஜாதித்யர் “ரேணுகா.. நாளைக் காலை கோவிலுக்கு நான் வருவேன்..உன்னைச் சந்திக்க இயலுமா..அல்லது எங்கு சந்திப்பது.. நிறையப் பேசவேண்டும்” என வினவ அவள் முகத்தில் வெட்கத்துடன் கூடிய குறு நகை விரிந்தது..”அதற்குள்ளாகவா போகவேண்டும்” எனக் கேள்வியும் வர, மறுபடி ஓசை வராமல் கெக்கெக்கெக் என சிரித்தபடி மாறன் மலர்க்கணைகளை எய்ய காதல் நாடகம் தொடர்ந்தது ரகசியமாய் அந்த மரத்தடியில்.. அப்படித் தான் நினைத்தனர் இருவரும்..

*

ஆனால் வாழ்க்கையில் எதுவும் ரகசியம் கிடையாது.. நாம் செய்யும் செயல்களை அஷ்டதிக்கு பாலகர்கள், நட்சத்திரங்கள், மரங்கள் என நிறைய சாட்சிகள் பார்த்துக் கொண்டு தானிருப்பர் எனப் பெரியவர்கள் சொல்வார்கள்.. அது போலவே சரித்திர நாடகங்களில் வருவது போல அந்தக் காதலரிருவரும் தனிமையில் இருப்பதை மரத்தின் பின்னிருந்து இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன!

*

(தொடரும்)