Movie on St.Thomas -Rajini as Valluvar ?

Thread started by joe on 5th July 2008 10:42 PM



ரஜினி நடிக்கப்போகும் அந்தப் புதிய படத்தின் பெயர் `புனித தோமையார்'. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்து, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு வேதம் போதிக்க வந்து வேதசாட்சியாக உயிர்நீத்தவர்தான் புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்' படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். `புனித தோமையார்' படத்தில் அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அதுபோல வள்ளுவரின் மனைவி வாசுகியாக யார் நடிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் இப்போது பந்தல்போட ஆரம்பித்திருக்கிறது.

`திருவள்ளுவராக', ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து `புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.

"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்' என்ற அளவுக்குத்தான் தெரியும்.

கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார்.

அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்'' என்று சொல்லி நிறுத்தினார்.

`படப்பிடிப்புக்கான வேலைகள் எப்போது தொடங்கும்?' என்று அவரிடம் கேட்டோம்.

"படத்துக்கான முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். கதையை இன்னும் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. தோமையார் வேடத்துக்காக அவரைப் போன்ற உருவத் தோற்றம் கொண்ட சுமார் முப்பது வெள்ளையர்களை கனடா, அமெரிக்க நாடுகளில் பார்த்து வைத்திருக்கிறோம். `ஃபேஷன் ஆஃப் கிறிஸ்ட்' என்ற படத்தில் இயேசுவாக நடித்த ஜேம்ஸ் கேவியசல் என்பவரையும் பார்த்துப் பேச உள்ளோம். அவரை இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. `புனித தோமையார்' படம் அகில உலக மொழிகள் அனைத்திலும் வெளியாகும். முதல் பிரதியை வாடிகனுக்குப் போய் போப்பாண்டவருக்குப் போட்டுக் காண்பிப்போம்'' என்றவர், அடுத்து ரஜினி மேட்டருக்கு வந்தார்.

"மயிலாப்பூரில் தோமையார் வாழ்ந்த கி.பி. ஐம்பதுகளில்தான் திருவள்ளுவரும் வாழ்ந்தார். இருவருக்கும் இடையில் அளவில்லாத நட்பு இருந்திருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவ போதனைகள் நிறைந்துள்ளன. அதிலும், `ஐந்தவித்தான்' என்று வள்ளுவர் கூறும் வார்த்தை, அப்படியே இயேசுவைக் குறிக்கும் சொல் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியும்.

வள்ளுவரைப் போலவே தோமையாரும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பார்ந்த விதத்தில் விவாதங்களும், கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன. இதன் எதிரொலியாக திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்பு போன்றவை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

`புனித தோமையார்' படம் குறித்த விவாதம் நடந்தபோது, எங்களுக்கு நெருக்கமான ஜெரோம் என்ற நண்பர் (ரஜினியின் ஆடிட்டர்), `சிறந்த ஆன்மிக பக்தியுள்ள ரஜினி, வள்ளுவரின் கேரக்டரில் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்' என்று கூறினார். தமிழ்நெறியை வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு இயங்கும் ரஜினியை வள்ளுவரின் உருவத்தோற்றத்தில் வைத்துப் பார்த்தபோது, எங்களுக்கும் அது சரியாகத்தான் தோன்றியது. உடனே, `உங்களின் நீண்டகால நண்பர் என்ற முறையில் ரஜினியின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு' என ஜெரோமிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம். அவரும் `விரைவில் இதுபற்றி ரஜினியிடம் பேசுகிறேன்' என்று கூறியுள்ளார்.

`புனித தோமையார்' படத்தில் ரஜினி வள்ளுவராக நடித்தால் அவருக்கு அது இன்னும் பெருமை தரும். வள்ளுவர் கேரக்டருக்கு ரஜினியின் முகத்தோற்றம் மிகப் பொருத்தமாக இருக்கும். வள்ளுவராக திரையில் ரஜினி வந்தால் அவருக்குத்தானே சிறப்பு? பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்கானென்ட் என்ற புகழ்பெற்ற இயக்குநர் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது.

அதேபோல், சமீபத்தில் நடிகர் அஜித்தின் `ஏகன்' பட ஷூட்டிங் சாந்தோம் அரங்கத்தில் நடந்தது. அப்போது அஜித்தின் மனைவி ஷாலினியிடம், தோமையார் படம் பற்றிக் கூறினோம். கேரளக் கிறிஸ்துவரான ஷாலினி, தோமையார் பற்றிக் கூறியதும் உற்சாகமாகி விட்டார். `இந்தப் படத்தில் அஜித் நடிக்க வேண்டும்' என்று நாங்கள் கூறியபோது, `நானே அவரிடம் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன்' என்று கூறியுள்ளார். இதுதவிர, விஜய், விக்ரம் ஆகியோரையும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைக்கப் பேசி வருகிறோம். ஜனவரி மாதத்துக்குப் பின் படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்'' என்றதோடு முடித்துக் கொண்டார் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி.

ரஜினியும் வள்ளுவர் வேடத்தில் தான் நடிப்பது தனக்கான மிகப் பெரிய கௌரவம் என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே, அது பற்றி அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், வள்ளுவர் வேடத்தில் ரஜினி வந்து எப்படி கலக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கூடவே, வாசுகியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது!


-kumudam



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)