9 Ruphai Nottu

Thread started by joe on 30th November 2007 07:32 PM



ஒன்பது ரூபாய் நோட்டு் - விமர்சனம்


மண்ணையும் மனசையும் பின்னி பிசைந்து படம் எடுப்பதில் தங்கருக்கு நிகர் அவரே! இந்த ஒன்பது ரூபாய் நோட்டும் அப்படிப்பட்ட கதைதான். பண்ருட்டி பக்கத்தில் அமைந்திருக்கும் பத்திரக்கோட்டை கிராமம். அங்கே வாழ்ந்த மாதவர் படையாட்சி, வேலாயி, அவர்கள் சார்ந்த வாழ்க்கை என்று நகரும் கதையில் பிழிய பிழிய அழுகையும், கவலையும் ஒட்டிக்கொள்ள, இந்த இரண்டரை மணி நேர செலுலாய்ட் சிற்பத்திற்கு அடிமையாகி போகிறது மனசு. (உள்ளே போகிறவர்களுக்கு கர்சீப் அவசியம்)

திருட்டு மாங்காய் பறிக்கும் சிறுசுகள், சாயங்கால சந்தையில் ஏலம் கேட்கும் பெருசுகள், சந்தடி சாக்கில் காதல் வளர்க்கும் இளசுகள் என்று தங்கரின் கண்கள் கிராமத்து நிஜங்களை உள்வாங்கியிருக்கிறது. இந்த நிஜங்களையெல்லாம் விஞ்சி நிற்கிறது சத்யராஜ் என்ற மஹா கலைஞனின் நடிப்பு.

கிராமத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் மாதவர் படையாட்சி, தன் பிள்ளைகள் துணையோடு வயலில் பாடுபடுகிறார். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆனபிறகும் பணத்தையும், பட்டுவாடாவையும் அப்பா மாதவரே பார்க்க, பெண்டாட்டிகளின் துணையோடு அப்பாவை கேள்வி கேட்கிற துணிச்சல் பிறக்கிறது மகன்களுக்கு. எதிர் வீட்டு பங்காளியின் தூண்டுதல் வேறு! இந்த லட்சணத்தில் கடைக்குட்டி மகனுக்கு அந்த ஊர் வண்ணானின் மகள் மேல் காதல்! கண்டிக்கிற அம்மாவிடம், அவள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்று போராடுகிறான். அவமானத்தால் கூனிக்குறுகி போகும் முதியவர்கள் இருவரும் பிள்ளைகளிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் பக்கத்தில் குடியேறுகிறார்கள். ஆறு வருடங்கள் போயே போய்விடுகிறது. போன இடத்தில் பெண்டாட்டியை பறிகொடுக்கிற மாதவர் திரும்பி ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில்...?

கிராமத்து மனிதர்களுக்கேயுரிய ரோசத்தோடும், பெருந்தன்மையோடும், மாதவர் படையாட்சியாகவே உருமாறிவிட்டார் சத்யராஜ். கோவிலில் மனைவிக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதத்தை கேட்டு அப்படியே உறைந்து போகிற காட்சியிலாகட்டும், பல வருடங்கள் கழித்து மகனை பார்த்து வேதனையில் துடிப்பதாகட்டும், மனைவியை பாம்பு தீண்டிவிட, ஐயோ என்று அலறித் துடிப்பதாகட்டும், கடைசி கடைசியாக பேரனை கொஞ்சிவிட்டு, வேறெதுவும் தர இயலாமல் இறுகிப் போவதாகட்டும், இனிமேல் நடிக்க எதை மிச்சம் வைத்திருக்கிறார் சத்யராஜ்? விருதுக்கமிட்டிகளுக்கு சத்யராஜின் விலாசம் பழகிவிடும் போலிருக்கிறது.

சத்யராஜுக்கு சமமான போட்டி என்றால் அது அர்ச்சனாவுக்குதான். அடித்தொண்டை கிழிய 'வாழும் முனியே... இப்படி பண்ணிட்டியே...' என்று அவர் அலறும் காட்சிகளில் மெய்சிலிர்த்து போகிறது. வா என்ற ஒருவார்த்தைக்காக கணவனின் கைபிடித்து நடக்கும் இந்த காதல் கிழவி கண்கலங்க வைத்திருக்கிறார்.

இந்து முஸ்லீம் உணர்வுக்கு எடுத்துக்காட்டாக மட்டுமல்ல, இதுவல்லவோ நட்பு என்று சிலாகிக்கவும் வைக்கிறார் நாசர். அதே நேரத்தில், தான் வளர்த்த ஆடுகள், சேமித்த பணம் எல்லாவற்றையும் கொடுத்த மாதவரை, எப்போதாவது வந்து பார்த்திருக்கலாமே இந்த காஜாபாய் என்ற கேள்வியும் எழும்புகிறது நாசரை பார்க்கும்போது.

கிராமத்து வண்ணான் வீட்டு பெண்ணுக்கு பெரியய்யா வீட்டு பையன் மேல் காதல். கூனிக்குறுகி அவர் வீட்டில் சோறு கேட்கும் அவலத்தை படித்த பெண்ணான அவளால் தாங்க முடியுமா? அந்த தவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் புதுமுகம் இன்பநிலா. (நிறம் என்னவோ அமாவாசை?)

அந்த கோவணத்து ஆசாமி, நம்ப டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரல்லவா? ரொம்ப பழசாக இருந்தாலும் நம்பிக்கை அளிக்கும் புதுவரவு.

மனசு பொங்கி கண்ணீருக்கு வழிவிடுகிற நேரத்தில் எல்லாம் அதை விரைவாக செய்துவிட வைக்கிறது இசை. அற்புதம் பரத்வாஜ். மார்கழியில் குளிச்சு பாரு...வேலாயி... போன்ற பாடல்கள் உள்ளிட்ட எல்லா பாடல்களிலும் இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பரத்வாஜ்.

அந்த ஊருக்கே அழைத்து போன உணர்வை அளிக்கிறது ஒளிப்பதிவு.

எல்லாம் கச்சிதமாக இருந்தும், திருஷ்டி பொம்மை போல் தலைநீட்டும் சில இடைச்செறுகல்களை தவிர்த்திருக்கலாம். (உ.தா- இப்பல்லாம் இந்த கொடிதான் நம்ப ஊர்ல அதிகம் பறக்குது. அவங்களுக்குதான் செல்வாக்கும் அதிகம்).

விலை மதிப்பற்ற நோட்டு

தரவு - தமிழ்சினிமா.காம்



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)