Thangar Pachan's PaLLiKoodam

Thread started by joe on 10th August 2007 09:23 PM




சிலேட்டு பருவத்து கதையை சொல்லி மனசில் Ôபச்சைÕ குத்தியிருக்கிறார் தங்கர் பச்சான். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. கலெக்டர்களையும், கலைஞர்களையும், கனவான்களையும் பதியம் போடும் தோட்டங்கள் என்கிறது படம். தங்கரின் இந்த சமூக பணிக்கு வந்தனம். அதே நேரத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் எல்லை மீறியிருப்பதற்கு கண்டனம்.

பல தலைமுறைகளாக படிப்பு தந்த பள்ளிக்கூடத்தை காலி செய்ய சொல்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதே பள்ளியில் படித்த பழைய மாணவர்களையும் திரட்டி பள்ளியை மீட்பதென்று முடிவு செய்கிறது நிர்வாகம். பள்ளிக்கூடத்தை காப்பாற்ற பழைய மாணவர் தங்கர்பச்சான், காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் மற்றொரு பழைய மாணவரான நரேனை பார்க்க போகிறார். இதே பள்ளியில் காதல் வளர்த்த நரேனின் இதயத்தை, அதே காதல் உடைத்து கண்ணாடி சில்லுகளாக பெயர்த்து வைத்திருக்க, அந்த கிராமத்து பக்கமே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நரேன். இவரின் பழைய காதலியும், அந்த பள்ளிக்கூடத்தின் இப்போதைய டீச்சருமான சினேகாவை மறுபடியும் அவர் சந்தித்தாரா? காதல் செடி மீண்டும் துளிர்விட்டதா? பள்ளிக்கூடம் மீட்கப்பட்டதா? அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணீர் சிந்த வைக்கும் அந்த க்ளைமாக்ஸ்.

இயக்கியிருப்பதோடு ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் தங்கர். காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் சின்ன வயது தோழனை பார்க்க பை நிறைய பதார்த்தங்களோடு வரும் அவர், அதிகாரிகளால் தடுக்கப்படுவதும், வந்திருப்பது பால்ய நண்பன் என்று தெரிந்து கலெக்டரே தேடி ஓடி வருவதும், சிலிர்க்க வைக்கிறது. இது சினிமாதான் என்று புத்தி சொன்னாலும், அந்த செலுலாய்டு நண்பனுக்கு மரியாதை தெரிவிக்கிறது மனசு. நரேனின் பழைய சட்டையெல்லாம் எடுத்து பைக்குள் செருகிக் கொண்டு, ÔÔவெற்றி, இது போதுண்டா... தினம் ஒரு சட்டையா போட்டு ஊருக்காரனுகளை அசத்திபுட மாட்டேன்ÕÕ என்று வெள்ளந்தியாக பெருமைப்படும் தங்கரை ரசிப்பதா? படிக்காத நண்பனின் நட்புக்கு முன்னே பணமும், பதவியும் பெரிய விஷயமல்ல என்று உருகும் நரேனை ரசிப்பதா? அற்புதம்!

திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கவே எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை இவர் இயக்குவது போல் காட்சி. பழி-தங்கருக்கு, பாவம்-சீமானுக்கு! (கானா உலகநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஜெராக்ஸா? கடவுளே)

அந்த பள்ளியிலேயே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியையும் மீட்க போராடும் சினேகாவின் காதல் கதையில் யதார்த்தம் நிறைய. அந்த பள்ளிக்கூடம் மாதிரியே நிலைகுலைந்து போயிருக்கிறது சினேகாவின் அழகு. கிராமத்து ஏழை டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனை நேருக்கு நேர் பார்க்க கூட திராணியில்லாமல் ஓடி ஒளிந்து, அழுது மருகுவது, அதிர வைக்கிறது. கோகிலா டீச்சர் இல்லாத இந்த பள்ளிக்கூடத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

நன்றாக போய் கொண்டிருக்கும் கதையில் ஸ்ரேயாவின் கேரக்டரை உள்ளே நுழைத்ததெல்லாம் ஓ.கே. பிஞ்சு குழந்தைகளை பிஞ்சிலே பழுத்தவர்கள் போல் காண்பிப்பதுதான் கொடுமை. எல்லா மாணவர்களுக்கும் டீச்சரின் மேல் ஈர்ப்பு வரும். அதை வேறு மாதிரி காட்டி, கஸ்தூரிராஜாவாக மாறியிருக்க வேண்டுமா தங்கர்?

அறுபது வயது முதியவர், தான் படிக்கிற காலத்தில் கண்டெடுத்த கொலுசை பற்றியும் அதை தவற விட்ட பெண்ணை நேசித்த கதையையும் சொல்ல, அந்த பெண் நான்தான் என்று மேடைக்கு வரும் அந்த நடுத்தர வயது பெண்மணியும், அதை தொடரும் காட்சிகளும் ரசனைக்குரியது. இதே போல் மனதில் நிற்கக்கூடிய இன்னொரு பாத்திரம் மீனாள். (தங்கர்பச்சானின் மனைவி)

ஒரு சிதிலமடைந்த பள்ளிக்கூடத்தை பார்த்தவுடனேயே பரிதாபத்தை ஏற்படுத்த வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜே.கே. பரத்வாஜின் இசையில் இதுவரை இல்லாத பரிமாணம். அப்படியே கரைந்து போக வைக்கும் பின்னணி இசை ஒருபக்கம் என்றால், Ôமீண்டும் பள்ளிக்கு போகலாம்Õ என்று அவரே குரலெடுத்து பாடும்போது கண்ணீர் முட்டுகிறது நமக்கு. Ôகாடு பதுங்குறமோ...Õ என்ற பாடலில் ஜீவனை குழைத்திருக்கிறார் பாடலாசிரியர் விவேகா.

காலத்தின் பேரிரைச்சல் தாங்க முடியாமல் திசைக்கொருவராக தெறித்து, செவிடாகி போனவர்களை தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்த பள்ளிக்கூடம். ஒரு முறையாவது அவரவர் பெஞ்சில் திரும்பவும் அமர வேண்டும் என்று நினைக்க வைத்த தங்கரின் பெயரில், ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்.

http://www.tamilcinema.com/CINENEWS/...llikkoodam.asp



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)