ராஜா சார் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் ஒரு 500 பாடல்களை அவராலேயே ரிப்ரொடியூஸ் பண்ண முடியாது என்று சொல்வதில் எனக்கொன்றும் அச்சமில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில் எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் எல்லா அம்சங்களும் பொருத்தி அளித்த எத்தனையோ பாடல்களில் அறுவடை நாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். அறுவடை நாள் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் பாடல்கள் மீது சற்றும் எனக்கு மோகம் குறையவில்லை.

தேவனின் கோயில் மூடிய வேளையில்: எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த பாடல்? ஒரு முழு படத்தின் சோகத்தை ஒரு பாடலில் சொல்லிவிட முடியுமா? சந்தோஷ நிகழ்வுகளும் இருக்கிறது தம்பி என்று சொல்லிவிட அதே பாடலில் ரொமான்டிக்கான ஹாப்பி பீட்ஸ் வைத்து விட முடியுமா? எந்த சோக பாடலுக்கான இலக்கணத்தையும் ரெபெரென்ஸ் செய்யாமல் தொடக்கத்திலேயே சர்ச் ஆர்கன் பின்னணியில் நாலைந்து டிராக்குகளில் சுலோகம் சொல்லி சிக்ஸர் அடித்து விடுகிறார் ராஜா சார்.. பிறகு பல்லவியை தொடர்ந்து வரும் முதல் இடை இசையில் சுகமாய் அடிக்கும் சர்ச் மணியோசை ஸ்ட்ரிங்ஸ்க்கும் குழலோசைக்கும் இசையில் இழைந்து வருவது டிவைன் அல்லவா? இரண்டாவது இடை இசையோ சொர்கம்.அதில் ராஜா சார் ஓங்கி உயர்ந்து ஹே தந்தன தந்தன தந்தனா சொல்வதை எதனுடன் ஒப்பிடுவது? கிட்டாரும், புல்லாங்குழலும், கிட்டாரும், தாள அமைப்புகளும் போட்டி போடுகிறதே? கங்கை அமரனையும், சித்ராவையும் நினைத்து பெருமை பட இந்த ஒரு பாடல் போதும்.

இந்த பாடல் என்னை அழ செய்திருக்கிறது.. துள்ளி இருக்கிறேன். இது தான் முடிவு என தெரியாமல் துவண்டு போயிருந்த வேளைகளில் இந்த பாடல் மூலம் தேவனிடம் புலம்பி இருக்கிறேன். தேவாலய மணிகள் ஒலிக்கும் போதெல்லாம் இந்த பாடலும் ரீங்காரம் இடுவதை இன்றளவும் தவிர்க்க முடிவதில்லை.

ராஜா சார், நீங்க இல்லாமல் போயிருந்தால், நான் இன்று இருந்திருக்க மாட்டேன்.

click here for the MP3 version